'இருட்டு அறையில் முரட்டு குத்து'  படத்தில் ஹாட் பேயாக நடித்து இளவட்ட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து யாஷிகா ஆனந்த், அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,  சைலன்டாக 'பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டு விளையாடினார்.

வெற்றி பெறும் தகுதி இருந்தும், மக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யாவுக்கு அதிகமாக சப்போர்ட் செய்ததால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வருகிறது. தற்போது மஹத்துடன் ஒரு படத்திலும், யோகி பாபு நடிக்கும் 'ஜோம்பி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியிலும் நடுவராக உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் ஒரு கையெழுத்து மூலம் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  பொழுதுபோக்கிற்காக சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார்.  அங்கு அவரை கண்டுகொண்ட பள்ளி மாணவர்கள் இவரை சூழ்ந்துகொண்டு,  ஆட்டோகிராப் வாங்கினார்கள்.

அப்போது ஒரு மாணவர் கையில் நோட்டு, பேப்பர் எதுவும் இல்லாததால் தான் வைத்திருந்த 200 ரூபாய் நோட்டை எடுத்து யாஷிகாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். இந்த கையெழுத்தால் தான் தற்போது தொடர் விமர்சனங்களை பெற்று வருகிறார் யாஷிகா.

சட்டப்படி ரூபாய் நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும்.  இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் யாஷிகா நடந்து கொண்டுள்ளார் என்றும் ரூபாய் நோட்டில் தவறுதலாக கிறுக்குவதோ எழுதுவதோ தவிர்க்கப்பட வேண்டியது மட்டும் அல்ல அது குற்றம் என்பது கூட அவருக்கு தெரியாமல் போய்விட்டதா என சமூக வலைதளத்தில் யாஷிகா விடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.