Writer R.K.Shanmugam Pass Away
பிரபல கதாசிரியரும், வசன கர்த்தாவுமான ஆர்.கே.ஷண்முகம் நேற்று மாலை மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இவருக்கு வயது 87 .
ஆர்.கே.ஷண்முகம் பிரபல இயக்குனர் பி.ஆர். பந்துலுவிடம் துணை இயக்குனராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கியவர்.
இவருக்கு கதையாசிரியர் என்கிற மிகப்பெரிய பெயரைக் பெற்றுக் கொடுத்தது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல, கடந்த 2014ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவந்து வசூல் சாதனையும் படைத்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருடன் 15 திரைப்படங்களுக்கும் மேல் பணியாற்றி எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்றவர் ஆர்.கே.ஷண்முகம். இவர் சிறந்த எழுத்தாளருக்காக தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
இவர் சிவாஜி நடித்த கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவு குறித்து அறிந்ததும், திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
