சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் துணைவியார் கணபதி அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 87.

கோவில்பட்டி இடைச்செவலில் பிறந்தவரான’நைனா’என்கிற  கி.ராஜநாராயணன் பல ஆண்டுகளாகவே தனது துணைவியாருடன் பாண்டிச்சேரியில்  வசித்து வருகிறார். அவரது, மனைவி கணவதி அம்மாள் உடல்நிலைக் குறைவு காரணமாக பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாத காலமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அம்மையாரின் மறைவுக்கு தமிழின் அத்தனை எழுத்தாளர்களும் இரங்கல் பதிவுகள் எழுதிவரும் நிலையில் எழுத்தாளர் அப்பண்ணசாமியின் பதிவு இது...

....கி.ராவின் மனைவியின் இறுதிச் சடங்கு புதுச்சேரியில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கிறது.கணவதி அம்மா இல்லை!
நைனா கி. ரா 90வது பிறந்தநாளையொட்டி நான் கண்ட நீண்ட நேர்காணலின் கடைசிக் கேள்வி: 60 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சிய தம்பதியாக வாழ்ந்திருக்கிறீர்கள். புதிய தம்பதியருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பொய் ரொம்ப அழகு; அதிலும் தாம்பத்யத்தில் ரொம்ப அவசியம்; பொய் சொல்லலாம். புரணி பேசலாம். பேசனும். ஒங்களுக்கு ஒன்னு தெரியுமா? மனுசனால எல்லா நேரமும் உண்மை பேசிக்கிட்டு இருக்க முடியாது. பொய் பேசனும்; அவங்களும் பொய் பேச அனுமதிக்கனும்..என்று நைனா பேச பக்கத்தில் அமர்ந்திருந்த கணவதி அம்மாவின் நமுட்டுச் சிரிப்பு முகத்தில் மினுங்கியது.கணவதி அம்மா இல்லாமல் நைனா இல்லை.. எவரின் நிழல் எவர் என அறிய இயலாதபடி இணைந்து வாழ்ந்தார்கள்.

கோவில்பட்டி தெருக்களில் வல்லவேட்டு சகிதம் நைனா உடன் அம்மா நடந்துவரும் அழகே, அழகு.நைனாவிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அம்மா என் மீது வைத்திருந்த பாசத்தின் விளைச்சல். 30 ஆண்டுகளுக்கு முன்பு பிஞ்சுகள், கதவு இன்னும் இரண்டு படைப்புகளில் ஏதாவது ஒன்றின் திரைக்கதையாக்கும் உரிமை கோரியபோது, அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொடுங்க என சந்திர கலை மூச்சுபோல கனவதி அம்மா தெலுங்கில் சொல்ல உடனே எழுந்துபோய் இதுவரை உரிமைக்காக போடப்பட்ட அக்ரிமெண்டுகள் கத்தைகளை எடுத்து வந்து இதுல எது இல்லையோ அத எடுத்துக்கோங்க என்றார், நைனா… அப்போது கணவதி அம்மாவின் மூக்குத்தி இன்னமும் அழகாக மின்னியது போல இருந்தது.
69 கால இணையின் பிரிவு! நைனாவை எப்படி தேற்றுவது. சுமார் 38 ஆண்டுகளில் எத்தனைவிதமான உணவுகள் உங்கள் கைகளால் சாப்பிட்டிருப்பேன். சாப்பிடவும் ருசிக்கவும் உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன், அம்மா..