அப்ப  ‘கஜினி’ படத்துல வர்ற மொட்டை மாடி கல்பனாவேதானா இந்த  முருகதாஸ் என்று வலைதளங்களில் மரண கலாய் கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்ட ‘சர்கார்’ இயக்குநரை. தற்போது இவருடன் கூட்டுக்களவாணியாக மாட்டிக்கொண்டு தவிப்பவர் ‘சர்கார்’ கதையின் இணை கதாசிரியர் என்று டைட்டிலில் இடம் பிடித்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன். 

வலைதளங்களில் தனக்கு ஆதரவான வாசகர்களையும், தன்னை பங்கம் செய்வதற்கென்றே அலையும் ஒரு கூட்டத்தையும் சம அளவில் வைத்திருப்பவர் ஜெயமோகன். தற்போது ஷங்கரின் ‘2.0’கமலின் ‘இந்தியன்2’ விஜயின் ‘சர்கார்’ ஆகிய மூன்று படங்களுக்கும் வசனம் எழுதும் பிசியான பிரமுகராக இருக்கிறார் ஜெயமோகன். 

‘சர்கார்’ கதை விவகாரம் தொடர்பாக துவக்கத்தில் மவுனம் சாதித்து வந்த ஜெயமோகன், ஏ.ஆர். முருகதாஸ் பத்திரிகைகளில் முழங்க ஆரம்பித்ததும் தன் பங்குக்கு ‘ஒன்றரை மாதம் அரும்பாடு பட்டு உருவாக்கிய கதை’ என்று கதை விட்டிருந்தார். அத்தோடு நில்லாமல் தனது வலைப்பதிவில்...

 

சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே  “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம்.  ஒரு நான்கு வெண்முரசு அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும். எங்கோ ஓரிடத்தில் இதிலுள்ள வேடிக்கையை நான் ரசிப்பதனால்தான் ஈடுபடவே முடிந்தது...என்று துவங்கி நீண்ட கட்டுரை ஒன்றை முக்கியிருந்தார்.

இப்போது முதல்குற்றவாளி முருகதாஸே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இணைக் குற்றவாளி என்ன சொல்கிறார் என்று அறிய கடந்த ஒரு மணிநேரமாக பல்வேறு தொலைக்காட்சி நிருபர்களும் ஆசானை தொடர்புகொள்ள முயற்சிக்க. போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தொலை தொடர்புக்கு வெளியே போய்விட்டாராம்.