பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி,கவின் உள்ளிட்ட இளம் வயதுப் போட்டியாளர்கள் மிகவும் முதிர்ச்சியாகவும் சேரன்,வனிதா போன்றவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதாகவும் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது பேட்டி ஒன்றில் விளாசியுள்ளார். சேரன் ஒரு பண்ணையார் போல் நடந்துகொள்வதாகவும் அது மிகவும் கண்டிக்கப்படக்கூடியது என்றும் அவர் கூறுகிறார்.

தனியார் இணையதளம் ஒன்றுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி அளித்த சாரு நிவேதிதா,’நான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்ப்பதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கூட முதல் 60 நாட்களாகப் பார்க்காமல் கடந்த 20 நாட்களாக ஹாட் ஸ்டார் மூலமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன். இந்நிகழ்ச்சியில் துவக்கத்திலிருந்தே சேரன் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார். கவினும் லாஸ்லியாவும் காதலிப்பது அவருக்கு அவ்வளவு பெரிய பாவமாகத் தெரிகிறது. அது அவர் எவ்வளவு பெரிய பழமைவாதி என்பதைத்தான் காட்டுகிறது.

அதுபோலவே லாஸ்லியாவின் அப்பாவும் மகளிடம் அவ்வளவு கடுமையாக நடந்துகொண்டிருக்கவேண்டியதில்லை.தன் மகள் ஒருவரைக் காதலிப்பதை அவ்வளவு பெரிய குற்றமாகப் பார்க்கவேண்டியதில்லை. அவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் மகளை மிரட்டிய வகையில் அவரை ஒரு குற்றவாளியாகத்தான் நான் பார்க்கிறேன். இந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் சேரன் தொடங்கி, பாத்திமா பாபு, வனிதா, கஸ்தூரி ஆகிய பெரியவர்களெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகவும் சாண்டி, தர்ஷன், கவின், முகேன் ஆகிய இளையவர்களெல்லாம் பெரும் முதிர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் சாண்டி அல்லது தர்ஷன் ஆகிய இருவரில் ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது’என்கிறார் சாரு.