திருமணமான பிறகும் உருகி உருகிக் காதலிக்கும் ரசிகர் பட்டாளத்துக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் நடிகை சமந்தா. அவர்களின் அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை. கூடிய விரைவிலேயே அவரை வெள்ளித்திரையில்  70 வயது பாட்டியாகப் பார்க்கப்போகிறார்கள். 

மேட்டர் இதுதான் தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கப்போகும் ஒரு படத்தில் 70 வயது பாட்டியாக துணிந்து நடிக்க சம்மதித்துள்ளார் சமந்தா. முறைப்படி அனுமதி பெற்றா அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் ரூட்டா தெரியவில்லை ஆனால் ஒரு கொரியப்படத்தின் ரீமேக் அது. 

2014-ல் வெளியான ‘மிஸ் கிரான்னி [miss granny] என்ற அந்தப்படம் அதிரிபுதிரி வெற்றிப்படமாகும். கதை இதுதான் விதவையான ஒரு பாட்டி விநோதமான போட்டோ ஸ்டியோ ஒன்றில் புகைப்படம் எடுக்கும்போது திடீரென 20 வயது நங்கையாக மாறிவிடுகிறார். முதலில் திகைத்தாலும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அவ்வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறார். அந்த கிழட்டு மிஸ்ஸை இரண்டு இளவட்டப்பயலுகள் துரத்தித்துரத்திக்காதலிக்கிறார்கள். 

மீதிக்கதையை சொன்னால் சமந்தா ரசிகர் மன்றத்தினர் சண்டைக்கு வருவார்கள் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் தயாராகிறது இப்படம். வெல்கம் சமந்தா பாட்டி.