‘தக் லைஃப்’ திரைப்படத்தால் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

சில நாட்களில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் வருகிற ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. புரமோஷன் பணிகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

‘தக் லைஃப்’ படத்திற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமலஹாசன், “கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது” என்று கூறியிருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்ததோடு ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என போராடி வருகின்றனர். ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட மாட்டாது என கர்நாடக வர்த்தக சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் கமலஹாசன் நீதிமன்றத்தை நாடி இருந்தார்.

‘தக் லைஃப்’ பட பிரச்சனையால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சிக்கல்

கமல் மன்னிப்பு கேட்க கர்நாடக உயர்நீதிமன்றம் மதியம் 2:30 மணி வரை கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தனக்கு வேதனை அளிப்பதாக கமலஹாசன் கூறியிருக்கிறார். இந்த பிரச்சனை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, ‘தக் லைஃப்’ திரைப்படத்தால் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ்க்கு கிளம்பிய எதிர்ப்பு

‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடாவிட்டால் தமிழ்நாட்டில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை திரையிட விடமாட்டோம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படமான ‘டாக்ஸிக்’ திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்து வருகிறார்.

கமலுக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் நெட்டிசன்கள்

‘தக் லைஃப்’ படத்திற்கு இடையூறு கொடுத்தாலோ அல்லது கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிடாமல் செய்தாலோ தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தையும், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கமலுக்கு ஆதரவாக பலரும் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.