80 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, அனைவராலும் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை விஜயசாந்தி.

பல முன்னணி நடிகைகள், குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த போது, அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்றார். இவரின் படங்களுக்கு தற்போதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

திரையுலகை விட்டு விலகியதும், அரசியலில் குதித்தார். ஆந்திரா மாநிலம் ஒருங்கிணைந்து இருந்தபோது விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்தார். அக்கட்சி சார்பில் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மெதக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

அதன்பின் தனித் தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மெதக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு விஜயசாந்தி தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். கட்சி கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் விஜயசாந்தி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்து, தமிழக அரசியலுக்கு போக மாட்டேன். ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கடந்த ஆண்டு தெரிவித்தார்.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜயசாந்தி,  தெலுங்கானாவில் உள்ள அரசியல் பற்றி பேசும்போது... 50  வயதை கடந்தும், ஏன் இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை என உருக்கமாக கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், "தெலுங்கானா மக்கள் தான் என் குழந்தைகள்", அவர்களுக்குப் பணி செய்யவே நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என அனைவர் மத்தியிலும் தெரிவித்தார். இந்த வார்த்தை தெலுங்கானா மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.