நடிகை ரேவதி விளக்கம் திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக , #ME TOO எனும் ஹாஷ் டேக்கினின் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை பகிர்ந்துவருகின்றனர் திரைத்துறை பிரபலங்கள். இந்த #ME TOO விவகாரம் தற்போது ஹாலிவுட் , பாலிவுட் , கோலிவுட் என ஹாட்டாக போய்க்கொண்டிருக்கிறது. 

இந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த #ME TOO வில் வைரமுத்துவிற்கு எதிராக சின்மயி கிளப்பி இருக்கும் விவகாரம் தமிழகத்தில் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த #ME TOO விஷயத்தில் நடிகை ரேவதியும் சமீபத்தில் ஒரு சம்பவம் குறித்து தெரிவித்திருந்தார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு 17 வயது பெண் தன் வீட்டு கதவை தட்டி, நள்ளிரவு நேரத்தில் தனக்கு ஏற்படவிருந்த ஆபத்தினை குறித்து அச்சத்துடன் பகிர்ந்து கொண்டு பாதுகாப்பு கோரினார் என ரேவதி தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்ட பிறகு ரேவதிக்கு எதிராக கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. அப்போது அந்த பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுத்தது மட்டும் போதுமா? இந்த சம்பவத்தை குறித்து போலீசில் புகார் அளிக்காதது ஏன் என ரேவதியிடம் கேள்வி எழுப்பி இருந்தனர் சிலர்.

முற்போக்குவாதியான ரேவதி இவ்வாறு புகார் கொடுக்காமல் இருந்தது தவறு என்றும் சிலர் விமர்சித்திருந்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரேவதி. அந்த பிரச்சனையில் பாலியல் தொல்லையோ.. துன்புறுத்தலோ நடக்கவில்லை… என கூறி அதனால் தான் அந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை என விளக்கம் கூறி இருக்கிறார்.