இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் சினிமா பயணம் பற்றி பார்க்கலாம்.

Vikram Sugumaran Film Journey : இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 47. மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டு சென்னைக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்ட இயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிரிந்தது. அவரின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த விக்ரம் சுகுமாரன்?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் விக்ரம் சுகுமாரன். இவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததால் அதில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னை வந்துள்ளார். 1999-2000 காலவாக்கில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் விக்ரம் சுகுமார். குறிப்பாக பாலு மகேந்திரா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஜூலி கணபதி படத்தில் விக்ரம் சுகுமாரனும் பணியாற்றி இருக்கிறார்.

நீண்ட போராட்டத்துக்கு பின் இயக்குனரான விக்ரம் சுகுமாரன்

சினிமாவில் படம் இயக்க வாய்ப்பு கிடைக்காததால் நடிப்பில் இறங்கிய விக்ரம் சுகுமாரன், வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து சசிகுமாரின் கொடிவீரன் படத்தில் நடித்த அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. கதிர், ஓவியா நடித்த ‘மதயானை கூட்டம்’ படம் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் விக்ரம் சுகுமாரன். முதல் படமே கிராமத்து கதைக்களத்தில் உருவாக்கினார். வித்தியாசமான கதை சொல்லல் மூலம் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் விக்ரம் சுகுமாரன்.

மதயானைக் கூட்டம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவரின் இரண்டாவது படம் 2023ம் ஆண்டு தான் வெளியானது. அப்படத்தின் பெயர் இராவண கோட்டம். அப்படத்தில் சாந்தனு நாயகனாக நடித்திருந்தார். இது நிலம் சார்ந்த கதை என்பதால், மழைக்காலத்தில் மட்டுமே படப்பிடிப்பை எடுத்தார் விக்ரம் சுகுமாரன். அதாவது ஓராண்டில் வெறும் 3 மாதம் மட்டுமே படப்பிடிப்பை நடத்தினார் விக்ரம் சுகுமாரன். தன் கதைக்கு உயிர்கொடுக்க அயராது உழைத்த அவர் தன்னுடைய மூன்றாவது படமான ‘தேரும் போரும்’ படத்தை இயக்க ஆயத்தமாகி வந்த விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

விக்ரம் சுகுமாரன் மறைவு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரது மறைவால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.