தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதுமே கடந்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுது போக்கு தளங்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக 204 நாட்களாக மூடப்பட்டிருக்கும் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு 5ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். திரைப்படம் தொடங்கும் முன்பும், இடைவேளையிலும் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும். தியேட்டருக்குள் நொறுக்குத் தீனி வழங்க கூடாது. கேன்டீன்களிலும் பாக்கெட் உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு அண்டை மாநிலமான புதுச்சேரி முதல் டெல்லி வரை 14 மாநிலங்களில் நேற்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பெரிதாக ரசிகர்கள் வராத போதிலும், நாட்கள் செல்ல செல்ல இந்த நிலை மாறி, இயல்பு நிலை திரும்பும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் இதுவரை தியேட்டர்கள் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

தியேட்டர்கள் திறப்பு குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கேளிக்கை வரி குறைப்பு, சினிமா டிக்கெட் கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திரைத்துரையினருக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் திரையரங்கு திறப்பு மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து விரைவில் ஆலோசனை நடத்த இருக்கிறோம். திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும்” என்றும் தெரிவித்தார்.