இந்தப் படத்திற்காக தேசிய விருது வென்ற கையோடு, 'மைதான்' என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 
அஜய் தேவ்கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். 

1952-ல் இருந்து 63 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவரும், இந்திய கால்பந்தாட்ட தந்தை என போற்றப்படுபவருமான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. 

பயோபிக் படமாக உருவாகும் 'மைதான்' படத்திற்காக உடல் எடையை குறைத்து, மெலிந்த தோற்றத்துடன் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் உருவாகும் இந்தப் படம், வரும் 2020 நவம்பர் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், மெலிந்த தேகத்துடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அழகாக இருந்த கீர்த்தி சுரேஷா இப்படி மாறிவிட்டார்! என ஆச்சரியமடைந்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்களோ, "இந்த புகைப்படம் கேவலாக இருக்கு" என்று கமெண்ட்களை தெறிக்கவிட, ஒரு ரசிகர் அதற்கும் ஒருபடி மேல் சென்று "எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரோ" என கீர்த்தி சுரேஷின் மீது சந்தேகக் கணையை எய்தியுள்ளார்.

சூர்யா, விக்ரமை போல உடல் எடையை குறைத்தும் கூட்டியும் நடிக்க நடிகர்களே தயங்கும் நிலையில், ஒரு நடிகையாக உடல் எடையை குறைத்து நடிக்கும் கீர்த்தி சுரேஷை பாராட்டாமல், அவர் உடல் தேகத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்வது நியாயமா? என அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பாலிவுட் படமான 'மைதான்' மட்டுமல்லாமல், தமிழில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பென்குயின்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதேபோல், தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் 'மிஸ் இந்தியா' படமும் அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவருகிறது.