மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு குரங்கு பொம்மை படத்தில் மீண்டும் நடித்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. மண் மணம் மாறாத பாரதிராஜா கிராமத்து பாணியில் பல படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில் கதிர் இயக்கத்தில் வந்த இதயம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம், திரையில் வரத் தொடங்கினார். பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வந்த ஆய்த எழுத்து படத்தின் மூலம் குணச்சித்திர நடிகர் வேடத்தில் நடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து ரெட்டைசுழி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் உடன் இணைந்து முன்னணி வேடத்தில் நடித்தார். அதன் பிற்கு விஷால் நடிப்பில் வந்த பாண்டிய நாடு படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதும் பெற்றார்.

கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் “குரங்கு பொம்மை” படத்தின் மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

நித்திலன் இயக்கத்தில் உருவான குரங்கு பொம்மை கடந்த 1-ஆம் தேதி அன்று திரைக்கு வந்தது. இப்படத்தில் விதார்த், டெல்னா டேவிஸ், கஞ்சா கருப்பு ஆகியோருடன் இணைந்து முன்னணி ரோலில் நடித்துள்ளார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் மனிதனுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது.

பல நடிகர்களை உருவாக்கிய பாரதிராஜா, பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட குரங்கு பொம்மை அவரது நடிப்புலக வாழ்வில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

சொல்லப்போனால் படத்தின் நாயகனான விதார்த்-ஐ தன் நடிப்பு திறமையால் மறக்க வைத்து விட்டார். அந்தளவுக்கு அனைத்து காட்சிகளிலும் எதார்த்தமாக நடித்து நடிப்புக்கு அச்சாரம் போட்டுள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் அவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகர், துணை நடிகருக்கான விருதுகள் கிடைக்குமா? என்று தெரியாது ஆனால், எல்லா தரப்பு ரசிகர்களையும் தனது விருதாக அவர் பெறுவார் என்பது நிச்சயம் தெரியும்.