வட இந்தியா தென் இந்தியாவைவிடவும். வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிடவும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சில பேருக்கு இருக்கிறது.

நாம் இந்தி மொழியை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை. எனக்கான இணைப்பு மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி - நடிகர்கள் வாக்குவாதம்

மதுரையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் தலித் இலக்கியவாதிகள் பங்கேற்கும் 2 நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை பா. ரஞ்சித் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த இலக்கிய விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.” என்று தெரிவித்தார். அவரிடம் தேசிய மொழி இந்தி என்பது தொடர்பாக அஜய் தேவ்கன் - சுதீப்புக்கு இடையே நடைபெற்ற ட்விட்டர் வாக்குவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஞ்சித், “இந்திய அளவில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகமாக இருப்பதனால் அவ்வாறு நினைக்கிறார்கள்.

இணைப்பு மொழி தமிழ்

பொதுவாக வட இந்தியா தென் இந்தியாவைவிடவும். வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிடவும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சில பேருக்கு இருக்கிறது. அதேபோல்தான் இந்தி மொழியை பல மாநிலங்களில் பேசக்கூடிய ஒரு மொழியாக இருப்பதால், அந்த மொழி மேன்மையானது என்று சிலர் யோசிக்கலாம். ஆனால், நாம்தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே. தொடர்ந்து நாம் சண்டை போட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். நாம் இந்தி மொழியை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை. எனக்கான இணைப்பு மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். 

திராவிடர்கள் சேர்ந்து நிற்பது முக்கியம்

அப்படி இருப்பதிலும் தவறில்லை. இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்றே நான் கருதுகிறேன். திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது முக்கியமானது என்றும் நான் நினைக்கிறேன்" என்று பா. ரஞ்சித் தெரிவித்தார்.