மேடம் தமிழிசைக்கு பி.பி. எகிறும் வகையில் பிரதமர் மோடியை பயங்கர பங்கம் செய்து ஒரு தமிழ்ப் பட டிசைன் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த ’நானும் காவலாளிதான்’ என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது. அவரைத் தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர்.

இதற்கு நாடு முழுக்க வரவேற்பும் நக்கல்களும் கிளம்பின. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில் ஸ்டைலாகப் போஸ் கொடுக்கும்  நாய் ஒன்று  ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டதா அல்லது ரசிகர்கள் உருவாக்கியதா என்ற விபரம் தெரியவில்லை.

இயக்குநர் விஜய் இயக்கியுள்ள ’வாட்ச்மேன்’ என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், காமெடி நடிகர் யோகி பாபுவுடன்  அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘பூந்தோட்டக் காவல்காரன்’ போன்ற படங்களை வைத்து பி.ஜே.பி. மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுக்க மீம்ஸ்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ‘வாட்ச் மேன்’ போஸ்டர் தமிழக பி.ஜே.பி. தலைவர்களின் பி.பி.யை உச்சத்துக்குக் கொண்டு செல்வது உறுதி.