இரு தினங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்துக்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு கார் ஓட்டியதே காரணம் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனாலேயே அவர் சம்பவ இடத்துக்கு போலீஸார் வருவதற்கு முன்பே தப்பி ஓடி சிகிச்சை பெற்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலிருந்து படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது பெரும் கார் விபத்தை சந்தித்தார். அந்த விபத்தைக் கண்ட சக பயணிகள் அவரது கார் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அப்போது அவர் பயங்கர குடிபோதையில் இருந்திருப்பதை மறைத்து தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். அவர் போதையில் கார் ஓட்டியதை மறைத்த அவரது மனைவி ஜீவிதா அளித்த வீடியோ பேட்டியில் கார் டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரது விபத்தடைந்த காரைக் கைப்பற்றிய போலீஸார் அதில் இரண்டு வோட்கா மது பாட்டில்களும் ஒரு டம்ளரும் இருப்பதை கண்டு பிடித்தனர். இதுகுறித்து ஷம்சாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கடேஷ் கூறும்போது, “அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. காரின் ஏர்பேக் ராஜசேகர் உயிரை காப்பாற்றி உள்ளது. நாங்கள் வருவதற்கு முன்பே அவர் புறப்பட்டு சென்று விட்டதால் மதுபோதையில் இருந்தாரா? என்பதை ஆய்வு செய்ய முடியவில்லை. ஆனால் காருக்குள் மதுபாட்டில் இருந்தது” என்றார். 

தான் போதையில் இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டது தெரிந்தால் ரசிகர்கள் எரிச்சலடைந்து ஏளனம் செய்வார்கள் என்பதாலேயே போலீஸார் வருவதற்கு முன்பே நடிகர் ராஜசேகர் அவசர அவசரமாக தப்பிச் சென்று, தனியார் மருத்துவமனையில் ரகசிய சிகிச்சை பெற்றுத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.