அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு ஆதரவாக நடந்துகொண்டு தனது ‘பேட்ட’ படத்துக்கு தமிழக அரசு கெடுபிடிகள் கொடுப்பதாக கடும் ஆத்திரத்தில் உள்ளார் ரஜினி.

நாளை ஒரே நாளில் ரிலீஸாகவுள்ள பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு பொங்கல் வரை ஒரு சிறப்புக்காட்சியையும் சேர்த்து 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அரசு உத்தரவை தியேட்டர்கள் பெரும்பாலும் மதிப்பதில்லை. கவனிக்கவேண்டியவர்களைக் கவனித்துவிட்டு இஷ்டத்துக்கு ஏழு முதல் எட்டு காட்சிகள் வரை திரையிடுவார்கள்.

இது தமிழ்சினிமாவில் ரெகுலராக நடந்து வரும் அத்துமீறல். அதிலும் சில மாதங்களாக சென்னையில் நள்ளிரவு 2 மணி, 3 மணிக்கெல்லாம் காட்சிகள் போட்டு டிக்கட் விலையை ஆயிரத்துக்கும் மேல் விற்றுக் கொள்ளையடிக்கிறார்கள். இதை அரசும் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள அஜீத் படத்துக்கு மட்டும் நள்ளிரவு 1 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு ரஜினி படத்துக்கு காலை 8.30 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அஜீத் பொதுவாக அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதால் அவருக்கு இந்த சலுகை என்றும் ரஜினி அதிமுக அரசைத் தொடர்ந்து தாக்கி வருவதால் அவருக்கு செக் வைக்கப்பட்டிருப்பதாகவும் கிசிகிசுக்கப்படுகிறது.