சும்மாவே அஜீத் ரசிகர்கள் ஆடித்தீர்ப்பார்கள். காலில் சலங்கையைக் கட்டிவிட்டால் சொல்லவும் வேண்டுமோ? 2019ம் ஆண்டு ட்விட்டரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்கள் பட்டியலில் அஜித்தின் ’விஸ்வாசம்’ முதல் இடம் பிடித்துள்ளது. பாலிவுட்சினிமா, நாடாளுமன்ற தேர்தல், கிரிக்கெட் என சகல சமாச்சாரங்களையும் ஓரம் கட்டி தல இந்திய அளவில் முதலிடம் பிடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.

ட்விட்டர் இந்தியா சார்பில் #Launch2020 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ட்விட்டர் இந்தியா, சர்வதேச நிர்வாகிகள், இந்தியாவின் மூத்த தொழில்துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில், 2019ம் ஆண்டு ட்விட்டர் இந்தியாவில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், முதல் இடத்தில் விஸ்வாசம் உள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது அஜித் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். 

 இந்த பட்டியலில் விஸ்வாசத்தைதத் தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்து மே மாதம் வெளியான மகரிஷி படம் நான்காவது இடத்தையும் தீபாவளி வாழ்த்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பதிவை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளது. அதில்,அஜித் ரசிகர்கள் தங்கள் விஸ்வாசம் மற்றும் வலிமையை மீண்டும் நிரூபித்துவிட்டனர். இதை மிகப்பெரியதாக மாற்றியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளது. அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.