சுமார் 4 வாரங்களுக்கு முன்பே நமது இணையதளத்தில் எழுதியிருந்தபடியே 'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக  உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. நடுவில் விஜய் படம் ஒரு தெலுங்குப்படம் என்ற தேடலில் இருந்த சிவா இறுதியாக யு டர்ன் அடித்து சூர்யாவிடமே வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது. இப்படம் தமிழகத்தில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிவா யாரை இயக்கவுள்ளார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதில் மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளதாகவும், இதனை விநியோகஸ்தர்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். சில இணையதளங்கள் அவர் விஜயை இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் சிவா அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, "இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே  நடைபெற்று வருகிறது. ஆனால் தொடர்ச்சியாக அஜித்துடன் படம் செய்து கொண்டிருந்ததால் இப்பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

'சிறுத்தை' படம் இயக்கும் போதே, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 2 படங்கள் இயக்குவதாக தான் சிவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார். இக்கதையில் யார் நடிப்பார்கள் என்பது இன்னும் சில நாட்களில் இறுதியாகிவிடும்" என்று தெரிவித்தார்கள்.

இந்நிலையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி சூர்யாவை வைத்து சிவா இயக்கும் பட அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என்று தெரிகிறது.