பொங்கலுக்கு பேமிலி ஆடியன்ஸை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் தான் விஸ்வாசம், இயக்குநர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் இது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றியுள்ளார்.

சுமார் ஒன்றரை வருடமாக காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்திருந்தது படத்தின் ட்ரெய்லர். ஒரு பக்கம் ரசிகர்களை குஷி படுத்தினாலும், குடும்பங்கள்  கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொழந்த பொண்டாட்டி செண்டிமெண்ட் இருந்த ஓடி போயிடுங்க, கொல காண்டுல இருக்கேன் கொள்ளாம விடமாட்டேன் என பேட்ட ரஜினியின் வசனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “உங்க மேல கொல கோவம் வரணும், ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு சார், பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம் ஊரு கொடுவிளார்பட்டி, பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா” உள்ளிட்ட அஜித்தின் வசனங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 

இதுகுறித்து இணையதள ஒன்றிற்கு பேட்டியளித்த எடிட்டர் ரூபன், “எதார்த்தமாக படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள்தான் அவை. இயக்குநர், தயாரிப்பாளர் என்னிடம் 1 நிமிடம் இருக்கக்கூடிய டீசர் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ட்ரெய்லர் மட்டும்தான் பூர்த்தி செய்யும் என்று நினைத்தேன். அதன்படிதான் ட்ரெய்லர் உருவானது. ட்ரெய்லரில் இருக்கும் அனைத்து காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
 
ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள மாஸ் காட்சிகள் அனைத்தும் படத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. நான் ட்ரெய்லரை முடித்த பின்பு முதல்முறையாக என் உதவியாளர்களிடம் தான் காட்டினேன். அதன்பிறகு இயக்குநர் சிவாவிடம் காட்டினேன். 

இயக்குநர் சிவா, அட்லீ இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவெனில் பார்வையாளரும், ரசிகர்களும் தனது படத்தின் நாயகனை எப்படி கொண்டாடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்றுவதுதான். விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து நான் மட்டுமல்ல படக்குழுவினர் மொத்தமாக அழுதுவிட்டனர். படத்தின் இடைவேளைக் காட்சி மிகவும்  செம்ம மாஸாக இருக்கும். கதையை ரிவீல் செய்யும் காட்சியாக அக்காட்சி அமைந்துள்ளது. அது இயக்குநர் சிவாவின் ஸ்பெஷல்” என கூறியுள்ளார் ரூபன்.