‘எனக்காக எவ்வித காம்ப்ரமைஸும் செய்துகொள்ளவேண்டாம். எப்படிப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரிஸ்க் எடுக்கத்தயார்’ என்று அஜீத் சார் கூறியதால் அவர் இதுவரை பண்ணாத சாகஸங்களையெல்லாம் சண்டைக்காட்சிகளில் செய்திருக்கிறார் என்கிறார் ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபைட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

இந்திய சினிமாவில் அடிபட்டு அடிபட்டு உடலில் அதிக ஆபரேஷன் செய்த விழுப்புண்கள் கொண்டவர் அஜீத் என்பது ஊரறிந்த உண்மை. இதையும் மீறி பெரும்பாலும் சண்டைக் காட்சிகளில் அவரே ரிஸ்க் எடுத்து நடிப்பார். ஆனால் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் அவரது முந்தைய படங்களைத் தூக்கி சாப்பிடக்கூடியவை என்கிறார் திலீப் மாஸ்டர்.

‘அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார். ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். இதை பற்றி மேலும் சொல்ல முடியாது, அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக  இருக்கும்" என்றார்.

இப்படத்தின் மெயின் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு நடித்திருக்கிறார்.