‘பேட்ட’,’விஸ்வாசம்’ தொடர்பாக வெளியாகும் அனைத்து செய்திகளுமே ரஜினியும் அஜீத்தும் முரட்டுத்தனமான மோதிக்கொள்வதைப் போலவே இருப்பதால் பெரும் கலக்கமடைந்திருக்கிறாராம் தல. ஆனால் அந்த மோதலை தான் துவங்கவில்லை என இயக்குநர் சிவா மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மீடியாக்கள் இருக்கும் திசையிலேயே திரும்பிப் பார்க்காத விஸ்வாசம் இயக்குநர் சிவா மெல்ல குட்டி குட்டியாய்ப் பேச ஆரம்பித்திருக்கிறார். அது போல படத்தின் ஃபைட் மாஸ்டர் உட்பட்ட டெக்னீஷியன்களும் படம் குறித்து கொஞ்சமாகப் பேசத் துவங்கியுள்ளனர். இது அஜீத்தின் அனுமதியுடனே நடக்கத்துவங்கியிருக்கிறது.

தற்போது ரஜினியுடனான மோதல் குறித்து இயக்குநர் சிவாவிடம் கேட்கப்பட்டபோது,’ இந்தக் குறிப்பிட்ட மோதல் குறித்து மட்டுமல்ல, எப்போதுமே அஜீத் தனது எதிரியாக யாரையும் கருதுவதில்லை. நான் சினிமாவுக்கு வந்தது என் வேலையை மட்டும் செய்யத்தானே ஒழிய மற்றவர்களோடு மோத அல்ல’ என்று என்னிடம் அஜீத் சார் அடிக்கடி கூறுவார் என்கிறார் சிவா.

மேலும் கூறுகையில் ‘அஜித் சிறந்த மனிதர். அவரைப் பற்றி சொன்னால், சொல்லிக்கொண்டே செல்லலாம். படத்தையும் தாண்டி பல நல்ல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்வார். ரசிகர்கள் எப்படி அஜித் மீது பாசமாகவும், விஸ்வாசமாகவும் இருக்கிறார்களோ, அதுபோல் அஜித்தும் அவர்கள் மீது விஸ்வாசமாக இருக்கிறார். அடிக்கடி ரசிகர்களைப் பற்றி பேசுவார். ஆனால் ரசிகர் மன்றம் வேண்டாம் என்பதில் முன்பு எப்போதையும் விட உறுதியாக இருக்கிறார்’ என்கிறார் சிவா.