திரைப்படங்களில் வரும் அதிரடி சண்டை காட்சிகளில் பெரும்பாலும் கதாநாயகர்கள் நடிக்க மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு தான் படப்பிடிப்பு நடக்கும். காரணம் படப்பிடிப்பில் நாயகனுக்கு அடிபட்டால், அவர்கள் அந்த காயத்தில் இருந்தும், வலியில் இருந்தும் மீண்டு வர சில நாட்கள் ஆகும் என்பதாலும் அது வரை படப்பிடிப்பும் இழுபறியில் இருக்கும் என்பதால் தான்.

ஆனால் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களும், என பலரும் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதையே விரும்புகின்றனர். எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும் ரிஸ்க் எடுத்து நடிக்க துணிகிறார்கள்.

பாதுகாப்பான முறையில், படப்பிடிப்பு எடுக்கப்பட்டாலும், சில சமயங்களில் எதிர்பாராத விதமாக, கதாநாயகனுக்கு, சண்டை காட்சியில் நடிப்பவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்படுகிறது. 

அந்த வகையில் 'ராட்சசன்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விஷ்ணு விஷால், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பிஸியாக இருந்தார். கடந்த நான்கு வாரத்திற்கு பின் படப்பிடிப்பில் சண்டை காட்சி எடுத்துக்கொண்டிருந்த போது, எதிர்பார்க்காத விதமாக தவறி கீழே விழுந்தார். அப்போது இவருக்கு கை,முதுகெலும்பு, மற்றும் கழுத்தில் பலமாக அடிப்பட்டது. 

படப்பிடிப்பு தளத்தில், வலியால் துடித்த விஷ்ணு விஷாலை படக்குழுவினர் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த தகவலை, தற்போது விஷ்ணு விஷால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த நான்கு வாரங்களாக வலியால் துடித்து வருவதாக தன்னுடைய பரிதாப நிலையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலர் இவருக்கு தொடர்ந்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.