’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று ஏறத்தாழ திருமணத்தை உறுதி செய்து அதிர்ச்சி அளிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

நடிகர் விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினி நட்ராஜை கடந்த ஆண்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி புகைப்படங்களை ட்விட்டரில் திங்கட்கிழமை வெளியிட்டிருந்தார்.இதையடுத்து விஷ்ணு, ஜூவாலாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதற்காகத் தான் மனைவியை அவர் பிரிந்தார் என்றும் செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில்,’எனக்கு ஜுவாலாவை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கு ஜுவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் களுடன் சேர்ந்து நேரத்தைச் செலவிடுவோம். எங்கள் நட்பு அதை தாண்டி அடுத்தக் கட்டத்துக்கு திருமணத்தை நோக்கிச் செல்லுமா என்பதை இப்போது சொல்ல இயலாது. நாங்கள் அவரவர் வேலைகளில் பிசியாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். 

நடிகர்களின் காதல் விவகாரத்தை ஒட்டி அவர்கள் கோபமாக மறுக்கும்போதே அது நடந்துவிடும் நிலையில் விஷ்ணு விசாலின் சாதாரண மறுப்பு பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.இதற்கு முன்னர் இவர் நடிகை அமலா பாலுடன் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.