இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் 'ஆம்பள' படத்தை தொடர்ந்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஆக்சன்.  அதிரடி சண்டைக் காட்சிகளுடன், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் 15ஆம் தேதி ரிலீசாகிறது.

நடிகை தமன்னாவும் விஷாலுக்கு போட்டி போடும் அளவிற்கு பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.  இந்த படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி, விஷாலின் மக்கள் நல இயக்கம் சார்பில் இந்த இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் உறவுகளுக்கு வணக்கம்... வருகிற நவம்பர் 15ஆம் தேதி புரட்சி தளபதி விஷால் அவர்கள் நடித்த 'ஆக்சன்' திரைப்படம் வெளிவர இருக்கும் மகிழ்ச்சியான தருணத்தில் புரட்சி தளபதி விஷால் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு பேனர் மற்றும்  கொடிகளை வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதனை தவிர்த்து,  ஏழை எளிய மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் உள்ளதால், அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன் சாலையில் பிரபல கட்சியால் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தொடர்ந்து பல பிரபலங்கள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது இந்த லிஸ்டில் நடிகர் விஷாலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.