எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடிக்கொள்ளும் விளம்பரவெறியர் என்று அறியப்பட்ட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திலும் கூட தனது ‘அயோக்யா’ படத்துக்கு பப்ளிசிட்டி தேடுகிறார் என்று நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’.’டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இதை  ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறையை முன்வைத்தும், தமிழக தேர்தல் நடந்து முடியும் அடுத்த நாளான  ஏப்ரல் 19-ம் தேதி 'அயோக்யா' வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ராஷி கண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கோபத்துடனும், வேதனையுடனும் பதிவிட்டு வரும் இந்த நிலையில், ரொம்ப வெவரமாக ‘அயோக்யா’ படத்தின் காட்சி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. 

இதில், "நாலு பேரை கொல்றதுக்கு ஐஞ்சு நிமிஷம் போதும். நடந்த கொடுமைக்கு அவங்கள தூக்குல ஏத்தணும். அப்ப தான் இந்த மாதிரி வெறி பிடிச்சவனுங்க பொண்ணுங்கள தொடவே பயப்படுவானுங்க" என விஷால் கேமராவைப் பார்த்து ஆவேசமாகப் பேசுவது போல அந்தக் காட்சி அமைந்துள்ளது.

படக்குழு இந்தக் காட்சியை ட்விட்டரில் பகிர துவக்கத்தில் வைரலாகி, பின்னர் கொந்தளிப்பான கமெண்டுகள் குவியத்தொடங்கின. இப்படியான சூழ்நிலையில் இதையும் வைத்து படத்துக்கு விளம்பரம் தேடுகிறார்களே, விஷாலின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என படக்குழு எதிர்பாராத வண்ணம் அவர்களது பப்ளிசிட்டி ஸ்டண்டுக்கு ரிவீட் அடிக்கும் வகையிலேயே அனைத்து கமெண்டுகளும் இருந்தன. பப்ளிக் இவ்வளவு ஷார்ப் ஆகிவிட்டதா என்று அதிர்ந்த படக்குழு அந்த வீடியோ பதிவுகளைத் தேடித்தேடி டெலீட் செய்துவருகிறது.