நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகள் வகிக்கும் விஷாலின் திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசியமாக நடைபெறவிருக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா வட்டாரத்தில் அடிக்கடி அடிபடும் செய்தியாக இருந்தது விஷால் திருமணம். அவர் யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்பது ரகசியமாக  இருந்தது. இதற்கிடையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகே தனக்கு கல்யாணம் நடக்கும் என வாக்கு கொடுத்திருந்தார் விஷால்.

பிறகு அதுவும் ஒரு ஹாட் நியூஸ் ஆனது. இதற்கிடையே கடந்த சில மாதங்கள் முன்பு இவரது திருமணம் குறித்து சில வதந்திகள் பரவியன. ஆகவே விஷால் தானாக முன்வந்து தனது வாழ்க்கை துணையை பற்றி கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவர் தனது திருமணம் எப்போது? எங்கே நடைபெறவுள்ளது என்பதை பின்பு அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை விஷாலுக்கும் அவரது வாழ்க்கை துணையான அலிஷா அல்லாவுக்கு ஹைதராபாத்திலுள்ள ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் கலந்து கொள்வதற்கு இரு வீட்டாருக்குமிடையே மிக நெருக்கமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக விஷாலின் நெருக்கமான வட்டாரத்தினர், இந்த நிச்சயதார்த்தம் முன்கூட்டியே திட்டமிடப்படி நடைபெறுகிறது. அதற்காக ஹைதராபாத்திலுள்ள மிக பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியை ஒப்பந்தம் செய்துள்ளோம். மிக குறைவான விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மிக உயர்தர மதிய உணவு விருந்து நடைபெறுகிறது. விஷால், அலிஷா இருவரது வீட்டாரும் இவர்களது திருமண நாளை இன்று அறிவிக்கவுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

மேலும் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து நடிகை குஷ்பு, சுந்தர் சி, ரமணா, நந்தா, ஸ்ரீமன், பசுபதி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சென்றுள்ளதாக தெரிகிறது. விஷாலின் நெருங்கிய நண்பர்கள் இந்நிகழ்ச்சியை வழி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை விஷால் தனது நண்பர்களுக்கு பெரிய பார்ட்டி கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இச்செய்தியை தனக்கு மிக நெருக்கமான பத்திரிகையாளர்களுக்குக் கூட தெரிவிக்காத விஷால், இது தொடர்பாக மிக விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் என்று தெரிகிறது.