கடந்த வெள்ளியன்றும் சனியன்றும் ரிலீஸான விஷாலின் ‘ஆக்‌ஷன்’விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ஆகிய இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் படு தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வி இருப்பதாகவும், நேற்று ஞாயிறன்று கூட இரு படங்களும் ஈ ஓட்டின என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் தமன்னா நடித்த ‘ஆக்‌ஷன்’படம் ரூ 55 கோடி பட்ஜெட்டில் உருவான படம் என்று சொல்லப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர்களை அழித்துவிட்டு உலக நாடுகள் பலவற்றில் ஒழிந்துகொண்டிருந்த தீவிரவாதிகளை விஷால் வேட்டையாடுவது போல் ஒரு கதை. தெரியாமல் முதல் நாள் முதல் காட்சி போன விஷால் ரசிகர்கள் அடுத்த காட்சிக்கு வந்த ரசிகர்களை,’தம்பி அப்பிடியே யுடர்ன் அடிச்சி உசுரோட வீடு திரும்பு’என அனுப்பி வைக்க சனிக்கிழமை அன்றே சுத்தமாகக் காத்தாட ஆரம்பித்துவிட்டது. படத்தின் பட்ஜெட் என்று சொல்லப்படும் தொகையில் 20 சதவிகிதமாவது தயாரிப்பாளர்ன் வீடு வந்து சேருமா என்பதே சந்தேகம்.

பல்வேறு பஞ்சாயத்துகளுக்குப் பின்னர் ஒரு நாள் தாமதமாக சனியன்று ரிலீஸான விஜய் சேதுபதியின் ‘தங்கத் தமிழன்’நிலைமையோ இன்னும் பரிதாபம். வி.சே.வுக்கு ஜோடியாக ராஷி கன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவர் நடித்த இப்படத்தின் கதை என்னவென்று தயாரிப்பாளர் இன்னும் தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல்.  வி.சே. பல பஞ்ச் வசனங்கள் பேசும் இப்படம் ‘ஆக்‌ஷனை விடவும் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். வசூலும் அவ்வாறே. 18 முதல் இருபது கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இப்படம் விஜய் சேதுபதி ரசிகர்களையே ‘ஏண்டா ஏன்?’என்கிற அளவுக்கு வெறுப்பேற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள்.