விஷால் நடிப்பில் கத்திசண்ட படத்தை வெளியிடும் சமயத்தில் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டது. ஒன்றரை கோடி ரூபாய் இருந்தால் தான் பிரச்சனை தீர்ந்து கத்திச்சண்ட படம் வெளியாகும் என்ற நிலை இருந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்த காரணத்தினால் படம் சொல்லியபடி ரிலீஸ் ஆகவில்லை என்றால் இமேஜ் பாதிக்கும் என்று விஷால் பயந்துள்ளார்.
   
இதனை தொடர்ந்து தனது சம்பளத்தில் கணிசமான தொகையை விட்டுக் கொடுத்ததுடன் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு பைனான்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்து கத்திச்சண்ட படத்தை வெளியிட உதவினார். ஆனால் படம் தோல்வி அடைந்த காரணத்தினால் விஷாலுக்கு பேசிய சம்பளத்தையும் கொடுக்க முடியவில்லை, விஷால் உத்தரவாதத்தில் வாங்கிய ரூ.1.5 கடனையும் அடைக்க முடியவில்லை.


   
இந்த நிலையில் தான் விஜய் சேதுபதியை வைத்து நந்தகோபால் 96 படத்தை தயாரித்துள்ளார். படம் வெளியாகும் சமயத்தில் விஷாலுக்கு செட்டில் செய்வதாக தயாரிப்பாளர் கூறிய நிலையில் செட்டில் பண்ணாமலேயே படத்தை வெளியிட முயற்சி செய்ததால் விஷால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சனை செய்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதி விஷாலுக்கு ரூ.1.5 கோடியை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்.


   
இதனை தொடர்ந்தே விஷால் 96 திரைப்படத்தை வெளியிட அனுமதித்தார். ஆனால் இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி ஹீரோ ஆகிவிட்டார். விஷாலோ வில்லன் ஆகிவிட்டார். பணத்திற்காக தயாரிப்பாளர் சங்க தலைவரே ஒரு படத்தை வெளியிட விடாமல் தடுக்கலாமா? என்ற பலரும் விஷாலையே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க ஆரம்பித்துவிட்டனர்.


   
அதே சமயம் விஜய் சேதுபதி இந்த விவகாரத்தில் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அவருக்கு நெல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கிடையே சன் டிவியில் விஷால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. இதனால் நந்தகோபாலிடமே தான் பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் விஜய் சேதுபதி தர வேண்டாம் என்றும் அறிக்கை ஒன்றை விஷால் வெளியிட்டுள்ளார்.