திருமணத்திற்கு முதல் நாள் வரை தன்னிடம் தாலி வாங்குவதற்கு பணம் இல்லை என்றும் தனக்கு உதவியது கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் என்று மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
தாலி வாங்கப் பணம் இல்லை: திருமணத்திற்கு முதல் நாள் வரை தன்னிடம் தாலி வாங்குவதற்கு பணம் இல்லை என்றும்ம் தனக்கு உதவியது கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் என்று மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்ரீனிவாசன் நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்துள்ளார். கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீனிவாசன் நேற்று காலை டயாலிசிஸுக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், திருப்பூணித்துறா தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. டவுன் ஹால் மற்றும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
48 ஆண்டுகால சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சாமானிய மக்களின் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் வழங்குவதில் ஸ்ரீனிவாசனுக்கு ஒரு தனித்திறமை இருந்தது. காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, டிபி கோபாலகோபாலன் எம்.ஏ, சந்தேஷம், வடக்குநோக்கியந்திரம், தலையணைமந்திரம் போன்ற படங்களை மலையாளிகளால் மறக்க முடியாது. ஐந்து முறை கேரள மாநில திரைப்பட விருது பெற்றுள்ளார்.
அவர் எழுதி, இயக்கி, நடித்த சிந்தாவிஷ்டயாய ஷியாமளா, வடக்குநோக்கியந்திரம் ஆகிய படங்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. மலையாளிகளின், சினிமா ரசிகர்களின் மனதில் ஸ்ரீனிவாசனுக்கு மரணமில்லை. நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் சூர்யா நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் இந்துவான நடிகர் ஸ்ரீனிவாசன் மற்றும் விமலா ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது நடந்த சம்பவம் பற்றி ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் நான் சினிமாவிற்கு வந்த காலகட்டம் அது. சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெறாத காலம். தன்னிடம் சொந்தமாக ஒரு மோதிரம் கூட வாங்க முடியாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி இருந்தது. வசதி கிடையாது.
திருமணத்திற்கு முதல் நாள் வரை தாலி வாங்குவதற்கு கூட பணம் இல்லை. அப்போது கிறிஸ்தவ நண்பர் இன்சாசெண்ட் தனது மனைவியின் நகையை வைத்து ரூ.400 கொடுத்தார். இதே போன்று இஸ்லாமியரான மம்மூட்டி ரூ.2000 கொடுத்தார். அதை வைத்து தான் இந்து பெண்ணான எனது மனைவிக்கு தங்கத்தில் தாலி வாங்கி அதனை ரிஜிஸ்டர் ஆபிஸில் வைத்து கட்டினேன் என்று உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் மம்மூட்டி வீட்டிற்கு சென்று ரூ.2000 வேண்டும் என்று கேட்டேன். திருமணம் வைத்திருக்கிறது. தாலி வாங்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் கொடுத்தார் என்று பேசியுள்ளார்.
