‘என் அண்ணனின் மனைவியே ஒரு நடிகை என்பதால், திருமணத்துக்குப் பிறகும் என் மனைவி அனிஷா தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு எந்தத் தடையும் இருக்காது’ என்கிறார் விரைவில் புதுமாப்பிள்ளை அவதாரம் எடுக்கவிருக்கும் விஷால்.

விஷாலின் தந்தை திருமணச் செய்தியை அறிவித்த நாளிலிருந்தே மணப்பெண்ணின் புகைப்படத்துக்கு அலைந்த மீடியா, அடுத்து ஆர்வம் காட்டிக்கொண்டிருப்பது, திருமணத்துக்கு பின்பும் விஷாலின் மனைவி நடிப்பாரா என்று தெரிந்துகொள்ள. காரணம் அனிஷாவின் தற்போதைய அடையாளம் அவர் ஒரு நடிகை என்பது மட்டுமே.

தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜூன் ரெட்டி’ ஆகிய இரு படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் ஒரு பெயரிடப்படாத ஆங்கிலப் படத்திலும் நடித்துவருகிறார். அனிஷாவுக்கு இப்பட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்ததே விஷால்தானாம்.

இந்நிலையில் தன்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருமே ‘திருமணத்துக்கு அப்புறம் அனிஷா...? என்று இழுக்கத்துவங்கியதால், ‘அனைவருக்கும் ஒட்டுமொத்தமாகச் சொல்கிறேன். என் அண்ணி ஷ்ரேயா ரெட்டியே ஒரு நடிகைதான். அதனால் எங்கள் வீட்டிலோ என் தரப்பிலோ திருமணத்துக்குப் பிறகு அனிதா நடிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.அவர் நடிக்க விரும்பினால் சும்மா இருக்கமாட்டேன். தேவைப்பட்டால் நானே இறங்கிச் சென்று அவருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன்’என்கிறார் விஷால்.