‘இளையராஜா 75’ நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை ஆடிட்டர்கள் சரிபார்த்து வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு வசூலான தொகை உட்பட்ட அத்தனை வருமானங்களும் மிக விரைவில் ஆன்லைனில் வெளியிடப்படும்’ என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.

சற்றுமுன்னர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகம் வந்த விஷால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்புகையில் நிருபர்களைச் சந்தித்துப்பேசினார். ’’இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததற்காக முதல்வரிடம் நன்றி தெரிவித்தோம். நிகழ்ச்சிக்கு 25 ஆயிரத்தும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சி தொடர்பான சாடிலைட் விற்பனை, டிக்கட் விற்பனை, ஸ்பான்சர் வருமானம் ஆகியவை ஆடிட்டர்களால் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணமாக இருந்தவர் பார்த்திபன் சார். அவரது யோசனையின்படிதான் ராஜா சார் நிகழ்ச்சிக்கு ஏ. ஆர். ரஹ்மானை அழைத்தோம். அவர்கள் இருவரையும் ஒரே மேடையில் பார்த்தது என்பது எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் பார்க்கமுடியாதது.

தமிழ்ராக்கர்ஸில் உடனுக்குடன் படம் வெளியாவது குறித்து என் மீது குற்றம் சாட்டுபவர்கள் அத்தோடு நின்று விடுகிறார்கள். என்னுடன் இணைந்து அவர்களை ஒழிக்க களம் இறங்குவதில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து கூறுகிறேன். இதே அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸை ஒழித்துவிட முடியும்’ என்றார் விஷால்.