நடிகர் விஷாலின் மேனேஜர் கார், இரவில் மர்மநபர்கள் தாக்கி சேதமடைந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால்.  நடிப்பை தாண்டி, தயாரிப்பாளராக விஷால் பிலிம் பேக்டரி மூலம் படங்களை தயாரித்தும் உள்ளார். இவருடைய அலுவகத்தில் ஹரி கிருஷ்ணன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய வீடு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் பகுதியில் உள்ளது. இந்நிலையில் இவர் நேற்று இரவு எப்போதும் போல் காரை தனது வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

காலையில் எப்போதும் வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹரி கிருஷ்ணன் காரை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக, அனைத்து பக்கங்களிலும் உள்ள கண்ணாடிகள் உடைந்து மோசமாக சேதமடைய செய்துள்ளனர். இதை தொடர்ந்து உடனடியாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் கடந்த வாரம், விஷாலின் அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றிய  பெண் ரம்யா என்பவர் 40 லட்சம் வரை மோசடி செய்ததாக ஹரி கிருஷ்ணன் விருகப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எனவே இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக, இவருடைய கார் நொறுக்கப்பட்டதா? என சந்தேகத்தின் பெயரில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.