தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

கடந்த ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசின் தனி அதிகாரி ஒருவரை நியமித்து அதன் செயல்பாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தமிழக நேற்று முன் தினம் பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்கிற சிறப்பு அதிகாரியாக நியமித்து நடிகர் சங்க செயல்பாடுகளுக்கான ரிமோட்டையும் தன் கைவசப்படுத்தியது. இதனால் கொதிப்படைந்த சங்க நிர்வாகிகள் பத்திரியாளர்களை சந்தித்து தங்களது குமுறலைக் கொட்டினர்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிபதி ஆதிகேசவலு முன்பு, நடிகர் விஷால் தரப்பு இன்று காலை முறையிட்டது.3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமானது என விஷால் தரப்பு மனுவில் கூறியுள்ளது.மேலும் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென விஷால் தரப்பு கோரியது.இது தொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறும் விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது.

அதற்கு நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் இந்த வழக்கையும் பட்டியலிட, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக கூறினார். முன்னதாக, நடிகர் சங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்தும் விஷால் தரப்பு அதிகாரத்தை கையில் வைத்திருப்பதாகவும், நிர்வாகக் குளறுபடி நிலவுவதாக வந்த புகார்கள் காரணமாகவும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.