நடிகர் விஷால் துணை இயக்குனராக  திரையுலகில் காலடி எடுத்து வைத்து பின் கதாநாயகனாக மாறியவர் விஷால். இவரின், உயரம், வெயிட், போன்றவை ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு ஏற்ற போல் உள்ளது என அவரை நடிகராகும்படி  ஊக்கு வித்தவர் நடிகர் அர்ஜுன்.

ஆரம்பத்தில் இவர் நடித்த செல்லமே, சண்டை கோழி போன்ற படங்கள் வெற்றிப்படமாக அமைந்தது. பின் பல படங்களில் வரிசையாக கமிட் ஆகி நடிக்க துவங்கினார்.

இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான, 'துப்பறிவாளன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருந்தார். எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழுவினர் தயாராகினர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருந்தது.

ஆனால் ஒரு சில விஷயங்களில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 'துப்பறிவாளன் 2 ' படத்தில் இருந்து மிஷ்கின் விலகி விட்டதாகவும், எனவே இந்த படத்தை விஷாலே இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, மிஷ்கின் பெயர் இடம்பெறாத, போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஷால் மற்றும் இளையராஜா அவர்களின் பெயர் மட்டுமே உள்ளது.

மேலும் நாளை இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.