திரைப்பட தாயரிப்பாளர் சங்கத்தை விமர்சித்ததற்கு, நடிகர் விஷால்  வருத்தம் தெரிவித்து  சென்ன உயர் நீதிமன்றத்தில் கடிதம் வழங்கினார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து  நடிகர் விஷால் பத்திரிக்கைக்கு பேட்டியளித்ததையடுத்து , அவரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கடந்த 14ல் இடைநீக்கம் செய்தனர். 

இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தான் கடந்த 2013ம் ஆண்டு முதல் பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன் மேல் வீண் பழி சுமத்தி வேண்டுமென்றே தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்,  விதிகளுக்கு எதிராக சட்ட விரோதமாக தன்னை இடைநீக்கம் செய்துள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.  

மேலும் தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஷால் தெரிவித்த கருத்திற்கு வருத்தம் தெரிவித்தால், சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தனது கருத்துக்கு  வருத்தம் தெரிவித்து விஷால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. இதனை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பெற்றுக்கொண்டு, தாயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இது தொடர்பாக முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம் என  தெரிவித்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க  வழக்கை  நாளை மறுநாள் ஒத்தி வைத்து நிதிபதி உத்தரவிட்டார்.