விஷாலின் அதிரடியை நவம்பரில் பார்க்கலாம்... ரசிகர்களுக்காக ரகசியத்தை போட்டிடைத்த படக்குழு...!

அதிரிபுதிரி சண்டை காட்சிகளுடன் உருவாகியுள்ள விஷாலின் ”ஆக்‌ஷன்” படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ’இரும்புத்திரை’, ’அயோக்யா’ என அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வந்த விஷால், அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் ”ஆக்‌ஷன்” படத்தில் நடித்துள்ளார். தமன்னா, யோகி பாபு, சாயா சிங், ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க, முழுக்க ஆக்‌ஷனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுந்தர் சி தான் இயக்கினாரா என ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். 

மேலும் இந்த படத்தில் நாயகி தமன்னாவும் பல ஸ்டேண்ட் காட்சிகளில் அசத்தலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான ”ஆக்‌ஷன்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ள சண்டை காட்சிகள் ஒருபுறம் என்றால், ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை கூடுதல் பலமாக அமைந்திருந்தது. படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி ஆக்‌ஷன் காட்சிகள் செம மாஸாக வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆக்‌ஷன் படத்தின் டிரெய்லர் யு-டியூப்பில் இதுவரை 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டுள்ளது. ‘மத கஜ ராஜா’,‘ஆம்பள’ படங்களைத் தொடர்ந்து, சுந்தர் சியுடன் 3வது முறையாக விஷால் கூட்டணி அமைத்திருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.  

விஷாலின் கேரியரில் முக்கிய படமாக ‘ஆக்‌ஷன்’ இடம் பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், படம் நவம்பருக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள், விஷாலின் செம ஆக்‌ஷன் மற்றும் ஆக்டிங்கை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.