காமெடி படங்களில் கலக்கி வந்த சுந்தர் சி, பேய் படங்களில் கைவைக்க அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அதிரடி ஆக்‌ஷனில் களம் இறங்கினால் என்ன என யோசித்த சுந்தர் சி, அதையே படத்தின் தலைப்பாக வைத்து ஷூட்டிங்கை ஆரம்பித்தார். மதகஜ ராஜா, ஆம்பள படத்தை தொடர்ந்து 3வது முறையாக சுந்தர் சி - விஷால் கூட்டணி கைகோர்த்துள்ள படம் "ஆக்‌ஷன்". இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஐஸ்வர்யா லட்சுமி, சாயா சிங், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழனுடன் ஆக்‌ஷன் படம் மல்லு கட்டியிருக்க வேண்டியது. கைதி, பிகில் படத்தைப் போல விஜய் சேதுபதி - விஷால் இடையே போட்டியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பணப்பிரச்னையில் "சங்கத்தமிழன்" ரிலீஸ் ஆகாமல் போக சோலோவாக களம் இறங்கியது "ஆக்‌ஷன்" திரைப்படம். முதலில் குறைவான தியேட்டர்களே கிடைத்த நிலையில், "சங்கத்தமிழன்" பட ரிலீஸ் தள்ளிப்போனதால் அந்த திரையரங்குகளிலும் "ஆக்‌ஷன்" படம் திரையிடப்பட்டது. ஹாலிவுட் பட அளவிற்கு சண்டை காட்சிகளில் தீப்பொறி பறந்தாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. ஆனால் படம் சிங்கிள் சிங்கமாக களம் இறங்கியதால் வசூலில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. 


உலகம் முழுவதும் நேற்று வெளியான "ஆக்‌ஷன்" திரைப்படம், ஒரே நாளில் சென்னையில் மட்டும் 34 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 3.5 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று இரவே ரிலீசான "சங்கத் தமிழன்" திரைப்படமும், இணையத்தில் "ஆக்‌ஷன்" படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸும் விஷாலுக்கு சோதனையாக வந்துள்ளனர். தடைகளை கடந்து "ஆக்‌ஷன்" படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தொடருமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.