*  வரவர நயன் தாராவைப் பற்றி வேற லெவல் செய்திகள் பொங்கிக் கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரைப் பற்றித்தான் பல டைமன்ஸன்களில் செய்திகள், போட்டோக்கள் உலாவரும். ஆனால் அந்த லிஸ்ட்டில் முதல் முறையாக நயனும் இணைந்திருக்கிறார். அவருடைய சமீபத்திய சினிமாக்கள் பற்றிய தகவல்கள் மட்டுமில்லாது, அவருடைய பழைய வருட விஷயங்கள், போட்டோக்கள் ஆகியனவும் இணையத்தை வைரலாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தனது சொந்த பெயரான ‘டயானா’வாக அவர் கேரளாவின் ‘கைரளி’ டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த பழைய வீடியோ ஒன்று சக்கை போடு போடுகிறது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் ஹலோ ஆப்களில்.


*  கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவுக்கு ஒரு பெரிய ஆசை. தனது மகள், ரஜினியுடன் ஜோடி போட வேண்டும்! என்பது. நெற்றிக்கண் படத்தில் மகன் ரஜினியின் ஜோடி மேனகாதான். இப்போது தன் மகளை ரஜினிக்கு ஜோடியாக்க விரும்பினார். அது நிறைவேறியது, யெஸ் ரஜினி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி. ஆனால் ஜோடியாக இல்லை! வேறு கேரக்டரில். 
தனது கடைசி மகள், பேத்தி வயது ஹீரோயின்களுடன் ஜோடி கட்டுவதில்லை எனும் முடிவுக்கு ஒருவழியாக வந்துவிட்டார் ரஜினி. ஆறுதல். 


*    ’உலகநாயகன்’ எனும் பட்டத்துக்கு நியாயம் செய்யும் வகையில் இந்த 60 ஆண்டு காலங்களில்  சினிமாவில் பலப்பல விதமான கேரக்டர்களில் நடித்துவிட்டார் கமல். சமீபத்தில் தன் பிறந்தநாளையொட்டி, தனது ரசிகர்களுடன் இணையத்தில் கலந்துரையாடியவர், இதுவரையில் தான் போட்ட கெட் - அப், மேக் - அப்களில் எது தங்களுக்கு அதிகம் பிடித்தது? என்று அவர் கேட்டதற்கு ‘அன்பே - சிவம்  படத்தின் கெட் - அப் மற்றும் கேரக்டர்தான்’ என்று சொல்லி கமலை கலங்க வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். 


*  கொழுக் மொழுக் அழகுக்காகவே  ஹன்ஸிகா மோத்வானியை தென்னிந்திய சினிமா கொண்டாடியது. குறிப்பாக ‘குட்டி குஷ்பு’ என்று தமிழ் சினிமா ஜோராக ஜொள் வடித்தது. ஒரு சின்ன ரவுண்டு வந்த ஹன்ஸி பாப்பாவுக்கும் சமீப வருடங்களாக பெரியளவில் படங்கள் கைகொடுக்கவில்லை. இப்போது ஒன்றிரண்டு படங்களில் ஏதோ இருக்கிறார் அவ்வளவே. 
இந்த நிலையில், அநியாயத்துக்கு மெலிந்து போய் இருக்கிறார்  ஹன்ஸி. அந்த போட்டோக்கள் தமிழ் ரசிகர்களை தாறுமாறாக கண்ணீர் சிந்த வைத்துவருகின்றன. 


*  பொருந்தாத உருவ ஜோடி! என்றாலும் கூட புதுப்பேட்டையின் தனுஷ் - சிநேகா ஜோடியை மறக்க முடியாது. வெகு நீண்ட இடைவெளிக்குப் பின் இருவரும் ’பட்டாஸ்’ படத்தில் இணைந்திருக்கின்றனர். இதில் ஹைலைட் என்னவென்றால் இருவருமே செம்ம ஹாட்டாக தோண்றுகிறார்கள்! என்பதுதான். தனுஷை விட்டுத் தள்ளுங்கள், மீசையை மழித்தால் ஸ்கூல் பாய் ஆகிவிடுவார். ஆனால் ஸ்நேவிடமும் இன்னும் ஈர்ப்பான இளமை கொப்பளிக்கிறது.