எதிர்காலத்தில் வெறுமனே படங்களில் நடித்துவிட்டு நேரடியாக ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. அதற்கு களப்பணிகளில் இறங்கிப் பணியாற்றவேண்டும் என்கிற உணர்வு நடிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் சமீபகாலமாக ரோட்டோரங்களில் இறங்கி குப்பைப் பொறுக்கக்கூட தயாராகிவிட்டார்கள்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். ’சுந்தர பாண்டியன்’, ’தர்மதுரை’, ’கடைக்குட்டி சிங்கம்’ படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ’தளபதி 63’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சவுந்தரராஜா ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மக்களுக்கான போராட்டமான ஜல்லிக்கட்டில் இவர் பெரிதும் பங்காற்றினார். 

அதன் தொடர்ச்சியாக தற்போது பீச்சை சுத்தம் செய்யும் சவாலை ஏற்று, நம்ம சென்னை டாக்டர் ராஜலட்சுமி குழுவினரும், நடிகர் சவுந்தரராஜாவின் மண்ணை நேசிப்போம், மக்களை நேசிப்போம் என்ற அறக்கட்டளை குழுவினரும் இணைந்து சென்னை பெசன்ட் நகர் பீச்சை சுத்தம் செய்திருக்கிறார்கள்.

 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சவாலில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், சிறுவர்கள் என்று பலரும் கலந்துக் கொண்டனர். 100 கிலோவிற்கு மேலான குப்பைகளை இவர்கள் அகற்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனியாக பிரித்து சுத்தம் செய்திருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய சவுந்தரராஜா, ‘எனது இந்த செயல்களுக்குப் பின்னால் கண்டிப்பாக எந்த அரசியல் ஆசையும் கிடையாது. நடிகனாக ஆகியிருக்காவிட்டாலும் ஏதாவது ஒரு மூலையில் இப்பணிகளை செய்துகொண்டுதான் இருந்திருப்பேன்’என்கிறார்.