5 பாட்டு, 6 ஃபைட்டு, ஏழெட்டு காதல்,காமெடிக் காட்சிகள் என்று ரெகுலர் ஃபார்முலாவுக்குள் தமிழ்சினிமா மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் எப்போதாவது ஆறுதலாக சில படங்கள் வருமே நிச்சயமாக அந்த வகையறாக்களில் ஒன்றுதான் இந்த ‘பக்ரீத்’.

தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி மேலாளரிடம், “நல்ல பூமிங்க அது. விவசாயம் செய்யப்போற கடைசி தலைமுறை நாமதான்…” என்று பதில் சொல்லும் விக்ராந்தின் குரலில் தெரியும் கழிவிரக்கம் வீழ்ந்துவிட்ட ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த ஏக்கம் எனலாம்.வங்கிக்கடன் எதிர்பார்த்தது போல் அமையாமல் போனதால் தனியாரிடம் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்கப் போன் இடத்தில் ஒரு ஒட்டகக் குட்டி கிடைக்க, அதையும் சேர்த்து ஓட்டிக் கொண்டு வரும் விக்ராந்த் அடுத்து அதை வைத்து பிழைப்பு நடத்த படுகிறபாடு இருக்கிற்தே?

அந்த ஒட்டகத்தைக் கண்ணும், கருத்துமாகப் பாதுகாத்து வளர்க்கும் அவரது மனைவியும், மகளும் கூட மனம் கவர்கிறார்கள். ஒரே நாடு என்றிருந்தாலும் நமக்கே வட இந்திய உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாது என்றிருக்க, ஒட்டகத்துக்கு புல்லும், வைக்கோலும் ஒத்துக்கொள்ளுமா..? அதை ஒரு மிருக வைத்தியர் விளக்கிச் சொல்ல, அந்த ஒட்டகத்தை சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கே கொண்டு விட நினைக்கும் விக்ராந்தின் முயற்சி என்ன ஆனது என்பதுதான் கதை.

தொடர்ந்து ஏனோதானோ படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகர் இருக்கிறாரா என்ற நினைப்பையே மறக்க வைத்த விக்ராந்துக்கு இது ஒரு மறக்கமுடியாத படம். இந்த ஒட்டகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நல்ல கதைகளில் பயணம் செய்ய ஆரம்பித்தால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெல்லலாம். அவரது மனைவியாக வரும் வசுந்தராவும் வசீகரிக்கிறார்.

ஒரு ஒட்டகத்தை மீட்கும் அம்புலிமாமா கதையில் சமுதாய மேன்மை, மனிதம் வலியுறுத்தி உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசியிருக்கும் இயக்குநர் ஜெகதீசன் சுபு, போற்றுதலுக்குரியவர்.படத்தின் ஒளிப்பதிவும் அவரே. உலகின் எந்த நாட்டில் திரையிட்டாலும் மொழி புரியாவிட்டாலும் கூட ரசிக்க முடியும் சாத்தியம் பெற்ற இந்தப்படத்தில் ஒளிப்பதிவு கலப்படமில்லாத உலகமொழியிலேயே அமைந்திருக்கிறது. முன்பாதி முழுக்க இமானின் இசையில் “ஆலங்குருவிகளா…” நம் தோளிலேயே அமர்ந்து கொண்டு ஊஞ்சலாடி வருகிறதென்றால் பின்பாதியில் ‘கரடு முரடுப் பூவே…’ கைகோர்த்துக் கொள்கிறது. பின்னணி இசையிலும் இமான் பின்னுகிறார்.
மொத்தத்தில் பக்ரித் கொண்டாடப்படவேண்டிய படமே.