’என் அப்பாவோட உடல்நலம் குறித்து எவ்வளவோ அவதூறான வதந்திகள். ஆனால் அத்தனையும் தாங்கிட்டு தை மாசத்துக்கு அப்புறம் அவர் எப்பிடி சிங்கம் மாதிரி எழுந்திரிச்சி வந்து செயல்படப்போறார்ன்னு பாக்கத்தான் போறீங்க’என்று குமுறி அழுதபடி, பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தபடி பேசினார் விஜயகாந்தின் வாரிசு விஜய பிரபாகரன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு  நேற்று  68 வது பிறந்தநாள் . அதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் உமராபாத் பகுதியில்   நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவரது மகன் விஜய பிரபாகரன் பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகளை வழங்கினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய பிரபாகரன் , தனது தந்தை விஜயகாந்தின் உடல்நிலை மிக நன்றாக இருப்பதாக தெரிவித்தார் . 

அப்போது பேசிய அவர்,”இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம். ஏன்னா அப்பாவோட உடல்நிலை இப்போ அவ்வளவு சீரா இருக்கு. இப்ப அப்பா அவ்வளவு சூப்பரா இருக்காரு. இப்ப ஏன் இதைச் சொல்றேன்னா அவ்வளவு பேரு அத்தனை விதமா அவதூறு பரப்புறாங்க. இதயெல்லாம் தாங்கிட்டு, இந்தக் கட்சியையும் வழி நடத்திட்டு எங்க அம்மா ஒரு பெண்மணியா என்ன பாடுபடுறாங்கன்னு கூடவே இருக்க எங்களுக்குத் தெரியும். தை மாசத்துக்கு அப்புறம் அப்பா எப்படி சிங்கம் மாதிரி வந்து நிக்கிறார்னு எல்லாரும் பாக்கப்போறீங்க. நாங்க எதுக்கும் கலங்குறவங்க இல்லை. நீங்களும் கலங்கக் கூடாது. என்னோட இந்த அழுகை கூட ஆனந்தக் கண்ணீர்தான்’ என்று நாத்தழுதழுக்க கண்ணீரைத் துடைத்தபடியே பேசினார் விஜயபிரபாகரன்.

அவர் அழுததைக் கண்ட பல தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். அவர்களில் சிலரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் வழங்கினார் விஜயபிரபாகரன்.