பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ஆச்சரியப்படுத்திய விஜய்சேதுபதி, அடுத்து தளபதி-64 படத்திலும் விஜய்க்கு வில்லானாகிவிட்டார். 

தொடர்ந்து, தெலுங்கு பக்கமும் தனது வில்லத்தனத்தை காட்ட தயாராகிவிட்ட அவர், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஏஏ20 படத்திலும் கமிட்டாகியுள்ளார். 

இப்படி, ஒருபக்கம் ஹீரோ, மறுபக்கம் வில்லன் என மாறிமாறி நடித்து வரும் விஜய்சேதுபதிக்கு சங்கத்தமிழன், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம் என அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. இதில், 'சங்கத் தமிழன்' திரைப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. 

இன்றைய தேதியில், விஜய்சேதுபதியின் கைவசம் உள்ள அரை டஜன் படங்களில் ஒன்று 'க/பெ ரணசிங்கம்'. இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

குணசித்திர நடிகர் பெரிய கருப்புத்தேவர் மகன் விருமாண்டி இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வேலராமமூர்த்தி, பவானிஸ்ரீ, சமுத்திரக்கனி உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். 

பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிமைக்க, சண்முகம் முத்துசாமியின் வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் 'தர்பார்' ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் சில படங்களும் பொங்கலுக்கு வெளியாக காத்துள்ளன. 

இந்தநிலையில், விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' படமும் பொங்கல் ரிலீஸ் ரேஸில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.