‘பிகில்’ ரிலீஸுக்குப் பின்னரே ‘தளபதி 64’படத்தில் நடிப்பதாக இருந்த நடிகர் விஜய், தீபாவளிக்கு முன்பு மூன்று வாரங்கள் நடிக்கக் கால்ஷீட் கொடுத்ததே தன்னுடன் வில்லனாக நடிக்க பெருந்தன்மையாக ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதிக்காகத்தான் என்கிறார்கள் அப்படக் குழுவினர்.

‘தளபதி 64’பட பூஜை கடந்த வியாழன்று தொடங்கிய நிலையில் படப்பிடிப்பும் அன்று முதல் தொடங்கி நான்ஸ்டாப்பாக நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தீபாவளிக்கு இரு தினங்கள் முன்புவரை தொடருமாம். காரணம்? இப்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காட்சிகள் அத்தனையும் விஜய், விஜய் சேதுபதி காம்பினேஷன் சம்பந்தப்பட்டவை. கைவசம் நாலைந்து படங்கள் உள்ள நிலையிலும் மிகவும் பெருந்தன்மையாக தங்கள் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதியின் தேதிகளை வீணடிக்காமல், அடுத்தடுத்த படங்களுக்கு அவருக்கு இருக்கக்கூடிய கெட் அப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் அவரை எவ்வளவு சீக்கிரம் முடித்து அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

எனவேதான் விஜய் சேதுபதி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் முதல் முறையாக ஒரு கல்லூரிப் பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் 60 சதவிகிதப் படப்பிடிப்பு கல்லூரி வளாகம் ஒன்றிலேயே நடைபெற உள்ளது.