விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் உள்ளிட்ட ‘பிகில்’படக்குழுவினரின் பி.பி.எகிறும் அளவுக்கு வரிசையாக சம்பவங்கள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. முதலில் சென்சார் அதிகாரிகள் படம் பார்ப்பதில் காட்டிய தயக்கம் முடிந்து தற்போது பழைய திருட்டுக்கதை வழக்கு ஒன்று தூசு தட்டப்பட்டிருப்பது இப்படம் தீபாவளிக்கு வருமா என்கிற சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது.

கடந்த 9ம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்ட ‘பிகில்’படத்தைப் பார்க்க மெம்பர்கள் தயக்கம் காட்டி வந்தனர். தாமதத்துக்கான குறிப்பான காரணங்கள் தெரிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று மாலை பார்த்த அதிகாரிகள் கட் எதுவும் கொடுக்காமல் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்து, அதை இப்போதைக்கு விளம்பரம் செய்யாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பியதாகத் தெரிகிறது. படம் 2மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடுகிறதாம்.

சென்சார் சிக்கல் அரைகுறையாக முடிந்த நிலையில் சுமார் ஒருமாதத்துக்கு முன்புவரை பரபரப்பாக இருந்து தயாரிப்பாளரின் செல்வாக்கால் முடித்து வைக்கப்பட்ட பழைய திருட்டுக்கதை வழக்கு ஒன்று தூசு தட்டப்பட்டுள்ளது.அப்போது அந்தக் கதை விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது அதனால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் கே.பி.செல்வா, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தெதி பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

இயக்குநர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.

கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு...என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.பட நிறுவனம் அப்போது சொன்ன செய்திக்கு மாறாக இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலிடம் விஜய் தொடர்பாக ஒரு முடிவுக்கு வரும்வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்றே தெரிகிறது.

இதனால் நாளை மாலைக்குள் முதல்வர் எடப்பாடியை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய குட்டிக்கரணம் அடித்து வருகிறது தயாரிப்பாளர் தரப்பு.