இன்றைய தமிழ் நடிகர்களில் பொதுப்பிரச்சினைகளுக்கு முதல் ஆளாய் குரல்கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி, சற்றுமுன்னர்,  பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு ரூ 25 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். நடிகர் சூர்யா குடும்பம் இதே நிவாரண நிதிக்கு ரூ 50 லட்சம் அறிவித்திருக்கும் நிலையில் தமிழ்த்திரையுலகிலிருந்து நீளும் இரண்டாவது உதவிக்கரம் விஜய் சேதுபதியினுடையது. 

 இது தொடர்பாகப் பேசிய விஜய் சேதுபதி, ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும்.

 அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும்.  இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார்.

மக்கள் பணத்தில் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்து சொகுசு பங்களாக்களில் வாழும் மற்ற நட்சத்திரங்களும் இனியும் யோசிக்காமல் தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டும்.