’தயாரிப்பாளர் சங்கம் முற்றிலும் செயல்படாத நிலைமையில் உள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால் சிறு படத்தயாரிப்பாளர்கள் சீக்கிரமே அழிந்துபோவார்கள்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் மீது அனல் கக்குகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

‘96 பட ரிலீஸ் சமயத்தில் அப்படத்துக்கு முட்டுக்கட்டை போட முயன்ற தினத்திலிருந்தே விஷாலுக்கும் விஜய் சேதுபதிக்கும் நடுவே ஒரு புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் டிசம்பர் 21 க்கு வெளியாகவிருக்கும் இவரது ‘சீதக்காதி’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4 படங்கள் ஒன்றாக ரிலீஸானாலே தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் என்னும் நிலையில் அதே தேதியில் சுமார் 7 படங்கள் வரை போட்டியிடுகின்றன.

இந்த விவகாரத்தில் உதவ வேண்டிய விஷால் நழுவிச் சென்றதால் அவர் மீது நடிகர் விஜய் சேதுபதி கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் நடிகர் சேரனின் படத்துவக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அவரிடம் சீதக்காதி படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று வெளியான தகவல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய்சேதுபதி, மைக்குகளை கீழே இறக்கி பிரச்சனை செய்ய வேண்டும் என்றே கேள்வி கேட்கிறீர்களா என்று சண்டைக்கு சென்றார்.

பின்னர் நிதானத்திற்கு வந்து தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனை ஒரு நபர் தீர்க்க முடியாமல் தப்பிக்கிறார் என்றும் நடிகர் விஷாலை மறைமுகமாக விமர்சித்துவிட்டு சென்றார்.