Vijay sethupathi said Do not receive National Award from Central govt

மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த சூழலில் எனக்கு தேசிய விருது கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாகக் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, தன்யா, சிங்கம்புலி, பசுபதி நடித்துள்ள கருப்பன் கருப்பன். ரேணிகுண்டா படம் தந்த பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விஜய் சேதுபதி, "இந்தக் கதை என் மனசுக்கு நெருக்கமானது. இந்த கதையைக் கேட்டதுமே வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. மாடுபிடி வீரனுக்கும் அவன் மனைவிக்குமான அன்பைச் சொல்லும் கதை இது. ஒரு திருவிழாவுக்குப் போன சந்தோஷம் இந்தப் படம் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும்," என்றார்.

அவரிடம், நீட் தேர்வு கொடுமை, நவோதயா பள்ளிகள் மூலம் இந்தித் திணிப்பு என தமிழருக்கு விரோதமான சூழலில், மத்திய அரசு உங்களுக்கு தேசிய விருது கொடுத்தால் பெற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "நீங்க யூகத்துல கேட்டாலும், இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்... இப்போதுதான் நீட் தேர்வுக்கு ஒரு உயிரையே பறிகொடுத்திருக்கிறோம். இந்த சூழலில் எனக்கு தேசிய விருது அறிவித்தால் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டேன். விருதுகளை விட என் மக்களின் உணர்வுதான் முக்கியம்," என்றார்.