மற்ற கதாநாயகர்கள் யாரும் கால்ஷீட் தராத பட்சத்தில், மூன்றாவது முறையாகவும் தனக்கு வாய்ப்புக் கொடுத்த விஜய் சேதுபதிக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஃப்ளாப் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். நேற்று ரிலீஸான இக்கூட்டணியின் ‘சிந்துபாத்’படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’படம் சுமாராக ஓடினாலும் இயக்குநராக அருண்குமாருக்கு ஒரு நல்ல அடையாளத்தைத் தந்திருந்தது. அடுத்து அவர் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ‘சேதுபதி’ ஆவ்ரேஜ் படம். ஆவ்ரேஜ் ஹிட் என்ற நிலையில் இண்டஸ்ட்ரியில் உள்ள அத்தனை ஹீரோக்களுக்கும் அருண்குமார் கதை சொல்லி சோர்ந்துபோயிருந்தார்.அந்த  நிலையில் மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதி கைகொடுத்திருந்தார்.

தயாரிப்பாளரின் பழைய கடன் பிரச்சினைகளால் பல ரிலீஸ்கள் தள்ளிப்போன நிலையில் படத்துக்கு சம்பளமாக வாங்கிய சில கோடிகளை விஜய் சேதுபதி திருப்பிக்கொடுத்தபின்னரே ‘சிந்துபாத்’ ரிலீஸானது. மனைவியை கடல் கடந்துபோய் மீட்கும் பழைய சிந்துபாத் கால கதையை மக்கள் ஏற்கவில்லை என்பதை படம் வெளியான முதல் இரு காட்சிகளிலேயே காண முடிந்தது.  இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பே படு சுமார் என்ற நிலையில் இன்னொரு பக்கம் படு பயங்கரமாக பில்ட் அப் பண்ணப்பட்ட அவரது மகனுக்கு நடிப்பே சுத்தமாக வரவில்லை.

இன்றைய இரண்டாவது நாள் நிலவரப்படி ‘சிந்துபாத்’ படம் செலவான தொகையில் கால்வாசியைக்கூட வசூலிக்காது என்பதே விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் கருத்து.