விஜய் சேதுபதியின் சம்பள பாக்கி உட்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இன்று காலை வெளியாகவேண்டிய ‘சங்கத் தமிழன்’படம் தமிழகம் முழுக்கவே ரிலீஸாகவில்லை. இதனால் தியேட்டருக்குப் போன விஜய் ரசிகர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

ஏற்கனவே ஓரிரு முறைகள் தள்ளிப்போன சங்கத்தமிழன் படம் இன்று தம்ழகம் முழுவதும் ரிலீஸாகவிருந்தது. இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை லிப்ரா புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ரிலீஸுக்கு முன் உள்ள பிரச்சினைகளை முறைப்படி செட்டில் செய்வதற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு பணம் தரவேண்டியிருந்த விநியோகஸ்தர் பணத்தைத் தராமல் இழுத்தடித்ததால், கடன்காரர்கள் அனைவரும் தயாரிப்பாளர்களை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக கடந்த இரு தினங்களாக நடந்த பஞ்சாயத்துகள் இன்று காலை வரை முடிவுக்கு வராததால் படம் இன்று மட்டுமல்ல, இந்த வாரம் ரிலீஸாவதே சந்தேகம் என்கின்றனர் பஞ்சாயத்தில் கலந்துகொண்டவர்கள்.

இதற்கு முன்பும் சில விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் நேரத்தில் சிக்கலில் மாட்டும்போதெல்லாம் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்தோ அல்லது கையிலிருந்து சில கோடிகளைக் கொடுத்தோ விஜய் சேதுபதி தனது படங்களை ரிலீஸ் செய்து வந்தார். ஆனால் இம்முறை அவருக்கே ரூ 2 கோடி வரை பாக்கி இருப்பதால் பஞ்சாயத்து நடக்கிற ஏரியா பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை என்கிறார்கள்.